அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது
இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், “நம்மிடம் திறமையற்றவர்கள் இருப்பதால் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு உலகில் மூன்றாம் போர் தொடங்கும். தற்போது ஆயுத பலம் மிக பயங்கரமாக இருப்பதால் நம் நாட்டில் நிறைய பேர் எஞ்சியிருக்க மாட்டார்கள். முட்டாள்களை வைத்து நாம் இந்த நாட்டை நடத்தி வருகிறோம். நம் நாடு மிகவும் பலவீனமாக உள்ளது. மூன்றாம் உலக போரில் விரைவில் முடிவடையும் நாடாக நமது அமெரிக்கா உள்ளது. ஏனென்றால் நம் நாட்டை வழிநடத்தும் முட்டாள்கள்தான் நம்மிடம் இருக்கிறார்கள்” என்றார்.