இலங்கை போர் முனையில் இருந்து உயிர் தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்து 21 ஆண்டுகள் அகதி என்ற ஒற்றைச் சொல்லோடு முகாமிற்குள் அடைபட்டுக் கிடக்கும் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களில் ஒருவராக தினுஷன் என்ற கிரிக்கெட் வீரர் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற ஏக்கத்தோடு வயதான தாயோடும், தந்தையாய் நின்ற சகோதரனோடும் உயிரை துச்சமாக நினத்து கடுமையான கடல் பயணம் செய்து ஆஸ்திரேலியா கரையேறி 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் நிரந்தர விசா கிடைக்காமல் தவிக்கும் 12 ஆயிரம் பேரில் ஒருவராக உள்ளார்.
மருத்துவம், படிப்பு, வேலை வாய்ப்பிற்காகவும், அகதி என்ற ஒற்றைச் சொல்லை மாற்றுவதற்காகவும் 12 ஆண்டுகளாக சட்டரீதியாக போராடியும் கூட நிரந்தர விசா கிடைக்காமல் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் விளையாட முடியாமல் தவியாய் தவிக்கும் தினுஷன் என்ற 33 வயது இளைஞர் தனக்கும் தன் இன மக்களைப் போல போர்முனைகளில் இருந்து ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ள 12 ஆயிரம் பேருக்கும் நிரந்த விசா வேண்டும் என்ற கோரிக்கையோடு பிர்ஸ்பேன் முதல் பாராளுமன்றம் அமைந்துள்ள கான்பராவுக்கு 1400 கி மீ தூரத்திற்கு கடுமையான பாதையில் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அடிக்கடி பஞ்சராகும் சைக்கிள், கால் முட்டிகளில் வலி இத்தனையும் பொருட்படுத்தாமல் அகதி என்ற வலியை போக்க தொடர்ந்து சைக்கிள் மிதிக்கிறார். 18 ஆம் தேதி கான்பராவில் பாராளுமன்றம் முன்பு கோரிக்கை முழக்கம் எழுப்ப வரும் பல நாட்டு புலம் பெயர்ந்த மக்களுடன் இணைந்து தானும் குரல் உயர்த்த உள்ளார்.
இவரது கடுமையான பயணம் கண்டு பலரும் பாராட்டினாலும் 17 ஆம் தேதி அவருக்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு வியந்தவர், கண்கலங்கிப் போனார். ஆம், நூற்றுக்கணக்கானோர் வழியில் நின்று வரவேற்று கட்டியணைத்து ஆதரவு கரம் நீட்டியதுடன் அகதி என்ற சொல்லை உடைத்து நிரந்தர விசா பெறுவோம் என்று ஆதரவாக பேசியதுடன் அதற்கான தடையாக உள்ள பதாகையை உடைத்து செல்ல வைத்த காட்சி உருக்கமாக இருந்தது. நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு் இவரது பயணம் இறுதி நாளை எட்டியுள்ளது.