பிரிட்டனை ஒட்டிய ஐரோப்பாவுக்கு அருகில் உள்ள வட கடலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கடல் விழுங்கிய கற்கால குடியிருப்பு ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகின் பெரும்பகுதி பனிக்கட்டியாய் உறைந்திருந்தது. அது கடைசி பனிக்கட்டிக் காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த வேட்டைச் சமூகத்தின் குடியிருப்பு ஒன்றை கடல் விழுங்கியது. சமீபத்தில் வடக்கு கடலில் ஆர்வி பெல்ஜிகா என்ற ஆராய்ச்சி கப்பலில் பயணித்த விஞ்ஞானிகள் சரித்திர காலத்துக்கு முந்தைய வனப்பகுதியையும் வேட்டைச் சமூக குடியிருப்பு ஒன்றையும் கண்டறிந்தனர்.
பல ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்புள்ள டாக்கர்லேண்ட் என்று அழைக்கப்படும் இந்த நிலப்பகுதியை கண்டறிந்திருப்பது புதிய வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், இது ஆச்சரியம் மட்டுமல்ல, அந்த காலகட்டத்தைச் சேர்ந்த பல பொருட்களையும், படிமம் ஆகிவிட்ட வனப்பகுதியையும் கண்டுபிடித்துள்ளோம் என்றார்கள்.
12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பனிக்கட்டியாய் உறைந்திருந்த வடக்குக் கடல் பகுதியில் பனி உருகத் தொடங்கியபோது வெளிப்பட்டது இந்த வனப்பகுதி. ஆனால், அதன்பிறகு கடல் நீர் அளவு உயரத் தொடங்கியது. 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடல் அளவு உயர்ந்ததில் இந்த வனப்பகுதியும், கற்கால குடியிருப்பும் கடலுக்குள் மூழ்கியது என்கிறார்கள்.