உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று முதன்முதலாக பரவத் தொடங்கிய சீன நாட்டில், தற்போது ஐஸ்க்ரீமில் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. கிழக்கு சீனாவின் தியான்ஜின் நகரில் இருக்கும் ஐஸ்க்ரீம் நிறுவனத்தின் ஐஸ்க்ரீம்களின் மாதிரிகளில் சோதனை செய்யப்பட்டபோது, அதில் கரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாதிரிகள் எடுக்கப்பட்ட ஐஸ்க்ரீம் அட்டைப்பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஏற்கனவே விற்கப்பட்ட ஐஸ்க்ரீம்களும், அதனை சாப்பிட்டவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இதுவரை யாருக்கும் ஐஸ்க்ரீம்களால் கரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் இல்லை என சீனா தெரிவித்துள்ளது. மேலும் ஐஸ்க்ரீம் நிறுவனத்தின் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்குக் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஐஸ்க்ரீம்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் நியூசிலாந்து மற்றும் உக்ரைனில் இருந்து வருவதால், அந்த மூலப்பொருட்கள் மூலமாக ஐஸ்க்ரீம்களில் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சீனா கூறியுள்ளது.