உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் விண்டோஸ் (Windows) மென்பொருள் முடங்கியுள்ளது. இதனால் தகவல் தொழில்நுட்பத் துறை, வங்கி, விமானம், ரயில், ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சேவைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில நாடுகளில் பங்குச் சந்தைகள் மற்றும் வங்கிகள் முடங்கின.
பொதுவாகக் கணினி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாக்க சைபர் செக்யூரிட்டி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சைபர் செக்கியூரிட்டி தொழில் நுட்பங்களை பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கி வழங்கி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சைபர் செக்கியூரிட்டி நிறுவனமான கிரவுட்ஸ்டிரைக்(CrowdStrike) நிறுவனம் நேற்று வெளியிட்ட புதிய அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன என்று கூறப்படுகிறது.
கணினிகளில் பாதுகாப்பிற்காக பால்கன் எனப்படும் சென்சார் அடிப்படையிலான முக்கிய சாஃப்ட்வேரை கிரவுட்ஸ்டிரைக் உருவாக்கி இருந்த நிலையில் அதனை விண்டோஸ் அப்டேட்டில் இணைத்தபோது சென்சார் செயலிழந்து புளூ ஸ்க்ரீன் எரர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுக்கு கிரவுட்ஸ்ட்ரைக் (CrowdStrike) நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது சைபர் தாக்குதல் இல்லை விரைந்து சிக்கலைக் கண்டறிந்து தீர்வு காண்பதற்கான பணிகளை செய்துவருகிறோம் என உறுதியளித்துள்ளார். மேலும் அனைத்து கணினி மற்றும் மடிக்கணினிகளை மீட்டெடுக்க வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா வெளியிட்டுள்ள பதிவில், கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் வெளியிட்டுள்ள அப்டேட் காரணமாகத்தான் உலகளவில் தகவல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில் பணியாற்றி வருகிறோம். வாடிக்கையாளர்களின் ஆன்லைன் இயக்கத்தை மீட்டெடுக்கும் வகையில் கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனத்துடன் சேர்ந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இயங்கி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.