சவுதி அரேபியாவின் ஜிசான் நகரில் அமைந்துள்ள கிங் அப்துல்லா விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் ஆறு சவுதி அரேபியர்களும், மூன்று வங்க தேசத்தவர்களும், சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்துள்ளனர். மேலும், விமான நிலையத்தின் சில முகப்பு ஜன்னல்களும் உடைந்துள்ளன.
இந்த ட்ரோன் தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், சவுதி அரேபியாவைக் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தும் ஹவுதி அமைப்பே இந்த தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.
ஏமன் நாட்டில் அதிபர் அப்தரபு மன்சூர் ஹாடி தலைமையிலான அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் மோதல் நடந்துவருகிறது. இந்த மோதலில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான படைகள் ஹவுதி அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்திவருகின்றன. இதனையடுத்து ஹவுதி அமைப்பு, சவுதி அரேபியாவைக் குறிவைத்து தாக்குதல்களை நிகழ்த்திவருகிறது. ஹவுதி அமைப்புக்கு ஈரான் ஆதரவளித்துவருவது குறிப்பிடத்தக்கது.