இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்துக்களால் துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (15.10.2021) வங்கதேசத்தின் கொமில்லா நகரில் உள்ள இந்து கோவிலில் குர்ஆனை அவமதித்ததாகக் தகவல் பரவியதையொட்டி, அந்த நகரில் இந்து கோவில்களும், துர்கா பூஜை பந்தல்களும் அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டன.
இதனையடுத்து, கொமில்லாவிற்கு அருகிலுள்ள மேலும் மூன்று நகரங்களில் கோவில்களும், துர்கா பூஜை பந்தல்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கொமில்லா பகுதியில் தொடங்கிய கலவரம் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இந்தக் கலவரத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் வங்கதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இந்த வன்முறை தொடர்பாக 4 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில், வங்கதேசத்தின் உள்துறை அமைச்சர் அசாதுசமான் கான், ஒரு குழு தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காக துர்கா பூஜை பந்தல்கள் மீதான தாக்குதல்களைத் தூண்டிவிட்டதுபோல் தங்களுக்குத் தெரிவதாக கூறியுள்ளார்.
மேலும் கொமில்லாவில் மட்டுமின்றி, ராமு மற்றும் நசீர்நகர் ஆகிய இடங்களில் வகுப்புவாத வன்முறையை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை சீர்குலைக்க இதற்குமுன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என தெரிவித்துள்ள அசாதுசமான் கான், குற்றவாளிகளுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே கல்வியாளர் பபித்ரா சர்க்கார், சிபிஐ (எம்) பொலிட்பீரோ உறுப்பினர் எம்.டி. சலீம், முன்னாள் கொல்கத்தா மேயர் பிகாஷ் பட்டாச்சார்யா என மேற்கு வங்கத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள், துர்கா பூஜை பந்தல்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அவர்கள் அந்தக் கடிதத்தில், "வங்காளதேச அரசு மற்றும் காவல்துறையின் உடனடி எதிர்வினையால் நிச்சயமாக ஒரு பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டது. ஆனால் 1971 விடுதலைப் போரினால் ஒளியூட்டப்பட்ட பாங்கோபந்துவின் (வங்கதேசத்தின் தேசத்தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின்) தாராளவாத, மதச்சார்பற்ற சிந்தனைக்கு எதிரான சக்திகளின் முயற்சி, மனிதநேயம் மீது நம்பிக்கையுள்ள மக்களை தொந்தரவு செய்துள்ளது" என தெரிவித்துள்ளனர்.
மேலும், "சிறுபான்மையினரின் உயிர், சொத்து மற்றும் அவர்களது சொந்த மதத்தைப் பின்பற்றும் உரிமையைப் பாதுகாப்பது பெரும்பான்மை சமூகத்தின் மீது உள்ளது" என சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இந்தியாவிலும் வங்கதேசத்திலும் இந்தப் பாதுகாப்பை உறுதிசெய்யாததால் தவறு நேர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.