அமெரிக்காவைச் சேர்ந்த பிட்காயின் முதலீட்டாளர் சாட் எல்வர்ட்டோவ்ஸ்கி என்பவர் தன் காதலி சுப்ரானி தெப்தெட் என்பவருடன் சேர்ந்து தாய்லாந்தில் கடலில் கான்கிரீட் வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். அந்த நாட்டின் புக்கெட் கடற்கரையிலிருந்து 12 நாட்டிகல் மைல் தூரத்தில் இந்த வீட்டைக் கட்டியிருக்கிறார்.
தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டியது சட்டவிரோத செயல் என்றும் அது நாட்டின் இறையாண்மையை மீறிய செயல் என்றும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் கட்டிய அந்த கடல் வீட்டில் மது அருந்துவது போன்ற புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தாய்லாந்து கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது கடலில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக தாய்லாந்து கடற்படையினர் வீட்டை வீடியோ எடுத்து, உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன் அனுமதியின்றி, உரிமையை மீறி தாய்லாந்தின் இறையாண்மைக்கு எதிராக இந்த வீடு கடலுக்குள் கட்டப்பட்டுள்ளதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து சாட் எல்வர்ட்டோவ்ஸ்கி மற்றும் சுப்ரானி தெப்தெட் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
அவர்கள் பிடிப்பட்டு வழக்கு நடந்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை கூட கிடைக்க வாய்ப்பிருப்பதாக தாய்லாந்து ஊடகங்களும் சட்ட வல்லுநர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.