கரோனா வைரஸின் தாக்குதலால் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உலகமே கடந்த சில மாதங்களாக முடங்கியுள்ளது. இருந்தபொழுதும் நோய்த்தொற்றின் வேகம் குறைந்தபாடில்லை. மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளும் முழுவேகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் நோய் பாதிக்கப்பட்ட நபர்களை வைத்து நிறைய ஆய்வுகள் நடத்தப்பட்டு தினமும் புதுப்புது ஆய்வு முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவைகள் கரோனா பீதியில் உள்ள மக்களுக்கு நம்பிக்கையையும், பயத்தினையும் மாறிமாறி கொடுத்துக்கொண்டுள்ளன.
அந்த வகையில் முதன்முதலில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்ட இடமான உகானில் நடைபெற்ற ஆய்வினை அடிப்படையாக வைத்து வெளிவந்துள்ள ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சியினை ஏற்படுத்துகிறது. உகானில் ஜாங்னான் எனும் மருத்துவமனையில் கரோனாவிலிருந்து குணமான 100 நபர்களை தொடர் கண்காணிப்பில் வைத்து ஒரு ஆய்வு செய்யப்பட்டது. அதில் 90 நபர்களின் நுரையீரல் கடுமையாக சேதமடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா நோயிலிருந்து மீண்ட வயது மூத்தவர்களை ஆய்வு செய்யும்போது 10 சதவீதம் பேரின் உடலில் ஆன்டிபாடி என அழைக்கப்படும் நோய் எதிர்ப்பு பொருள் மறைந்துவிடுவதும் தெரியவந்தது.