சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் பரவ தொடங்கிய கரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 160 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது. உலக அளவில் 1,98,214 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதற்கிடையில் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியட இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் மாலை தெரிவித்திருந்தார். கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பான ஆய்வு அமெரிக்காவில் தொடங்கியுள்ள நிலையில் ட்ரம்பின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், "அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களிலும் கரோனா வைரஸ் பரவி இருக்கிறது. ஒரு ஆண்டு நீடிக்கும் மருந்து கண்டுபிடிப்பது தொடர்பான சோதனையை, சில நாட்களிலேயே முடித்திருக்கிறோம். மருந்து தயாரிப்பு மற்றும் மருத்துவ தொழில் நிறுவனங்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். ஏப்ரல் இறுதிக்குள் கரோனா வைரஸூக்கான மருந்து தயாராகி விடும்" என தெரிவித்தார்.