குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.
இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.
இதற்கிடையே, குடியரசு கட்சி சார்பில், வேட்பாளராக நிற்க போவது யார் என்பதற்கான தேர்தல், அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்கு செல்வாக்கு பெரும் நபர் தான், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து, அந்த கட்சியைச் சேர்ந்தவரான நிக்கி ஹாலே போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
அந்த வகையில், கடந்த 3ஆம் தேதி வாஷிங்டன் மாகாணத்தில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளர் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில், டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட நிக்கி ஹாலே வெற்றி பெற்றுள்ளார். வாஷிங்டனில் தொடர்ந்து வெற்றி பெற்றுவந்த டொனால்ட் டிரம்பிற்கு இது முதல் தோல்வியாக அமைந்தது. மேலும், கொலம்பியா, மிச்சிகன், நெவாடா, தெற்கு கரோலினா, லோவா போன்ற மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். எஞ்சிய 15 மாகாணங்களில் நேற்று (05-03-24) குடியரசு கட்சி சார்பில் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.