பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா ஐ.நா.வில் மேற்கொண்ட முயற்சிகளை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் பலமுறை தடுத்துவிட்டது.
இந்நிலையில் தற்போது மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சியை பிரான்ஸ் முன்னெடுத்துள்ளது. இது பற்றி கூறியுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர், "சீனா தொடர்ந்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளும், ஐநா பாதுகாப்பு கவுன்சில் 1267 குழுவின் ஆய்வில் பங்கு கொள்ளும்" என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த முறையும் இந்த விவகாரத்தில் சீனா இதைதான் கூறியது, ஆனால் ஐ.நா வில் இந்தியாவின் தீர்மானத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. அதுபோல இந்த முறையும் நடக்கலாம் என இந்தியா கருதுகிறது. இந்நிலையில், "மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதில் ஏற்படும் தோல்வி பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எதிரானதாக அமையும்" என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இது அமெரிக்கா சீனாவிற்கு கொடுத்த எச்சரிக்கையாகவே உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது. எது எப்படி அமைந்தாலும் இந்தியா மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இணைப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிகிறது.