பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி புல்வாமா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த மாதம் 26-ம் தேதி, பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள பால்கோட் பகுதியில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது முகாம்கள் மீது இந்திய விமானப்படையினர் குண்டு வீசி அழித்தனர், இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு கூறி வருகிறது.
ஆனால் உயிர்சேதம் தொடர்பான இந்தியாவின் அறிக்கையை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் பால்கோட் பகுதியில் இந்திய விமானிகள் 19 பைன் மரங்களை குண்டு வீசி தகர்த்துவிட்டதாக அந்நாட்டு வனத்துறை இந்திய விமானிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
ஏற்கனவே மரங்களை அழித்து சுற்றுசூழலுக்கு எதிரான தீவிரவாதத்தை இந்தியா மேற்கொண்டது என பாகிஸ்தான் ஐ.நா சபையில் புகாரளித்தது. இந்நிலையில் மரங்களை அழித்ததாக இந்திய விமானிகள் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சேதமான மரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு ஐ.நா சபையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.