Skip to main content

ஆண் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும்? ஜஸ்டின் ட்ரூடோ சொல்லும் தீர்வு!

Published on 16/03/2019 | Edited on 16/03/2019
Justin

 

பொள்ளாச்சியில் இளம்பெண்களுக்கு நடந்திருக்கும் கொடூரம், அந்த செய்தியைக் கேட்கும் ஒவ்வொருவரின் இதயத்தையும் நடுங்கச் செய்கிறது. 250க்கும் மேற்பட்ட இளம்பெண்களைச் சீரழித்த காமுகர்களை, அதிகார பலத்தில் இருந்துகொண்டு துஷ்பிரயோகம் செய்த கொடூரர்களை தண்டிக்கச் சொல்லி மிகப்பெரிய போராட்டம் மாநிலம் முழுவதும் வெடித்திருக்கிறது.
 

இன்னொரு புறம், பெண் பிள்ளைகளின் வளர்ப்பு முறை குறித்து, சிலர் பாடம் எடுக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், இனி ஆண் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று சொல்லித்தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக விவாதம் கிளம்பியிருக்கிறது. 
 

இந்நிலையில், சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தன்று, ஏன் என் பிள்ளைகளைப் பெண்ணியவாதிகளாக வளர்க்க வேண்டும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எழுதிய கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்ததாக பட்டதால், அதை இங்கே பதிவிடுகிறோம். தன் மூத்த மகளை பெண்ணியவாதியாக வளர்ப்பது குறித்தும், சமூகத்தில் அவள் பாதுகாப்பாக உணர்வது குறித்தும் விரிவாக பேசும் ட்ரூடோ, தனது மகன்களை பெண்ணியவாதிகளாக வளர்ப்பது குறித்து இப்படிச் சொல்கிறார்... 
 

“உண்மையில் பெண்ணியம் என்பது பெண்களுக்கு மட்டுமானது அல்ல. ஆண்களுக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளைப் போலவே பெண்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்; அதை உண்மையாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும். எங்கள் மகன்களான சேவியர் மற்றும் ஹாட்ரீனுக்கு சமூகத்தில் இருக்கும் பாலின பாகுபாடுகளைக் களையும் வலிமையும், கடமையும் இருக்கிறது. 
 

அவர்கள் இப்போது சிறுபிள்ளைகளாக இருந்தாலும், இளைஞர்களாக வளரும்போது சமூகத்தில் திறந்த உண்மையும், அன்பும் மற்றும் நீதியோடு இணக்கமானவர்களாகவும் இருக்கவேண்டும். ஆண்மைத்தனங்களால் திணிக்கப்பட்டிருக்கும் அழுத்தங்களை சக ஆண்கள் மற்றும் சமூகத்தில் இருந்து விரட்டுபவர்களாக அவர்கள் வளர வேண்டும். அவர்கள் அவர்களாகவும், பெண்ணியவாதிகளாகவும் வளர்ந்து சமூகத்தில் அவர்களை அவர்களே பெருமையாகப் பார்க்கும் நிலை உருவாக வேண்டும்.
 

ஆணும் பெண்ணும் சமம் என்பதை நிலைநாட்டுவதுதான் பெண்ணியம் என்ற புரிதல் இங்கு இருக்கிறது. உண்மையில் பாலின சமத்துவம் இருந்தால், இங்கு ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் இருக்கலாம் என்ற அறிவுக்கண்ணுடன் அதைப் பார்க்கவேண்டும் என்பதே என் எண்ணம். இருபாலருக்கும் சமமரியாதையும், அன்பையும் கொடுக்கும் உலகை உருவாக்க நாம் அனைவரும் ஓர் ஒப்பற்ற ஈடுபாடுடன் செயல்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஏனென்றால், உங்கள் உரிமைகளும், சுதந்திரமும் பாதுகாப்பானதாக இருக்கும்பட்சத்தில் அது எனக்கானதுமாகத்தானே இருக்கும்.”
 

சார்ந்த செய்திகள்