கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் சீனாவின் பிற பகுதிகளிலும் கரோனா வைரஸ் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் சீனாவில் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
இந்நிலையில் ஹூபே மாகாணத்தில் செவ்வாய் கிழமை மட்டும் 136 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் மரணமடைந்துள்ளனர் என்று சீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது . இதன்மூலம் சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 2004 ஆக உயர்ந்துள்ளது.
தினசரி பலரும் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 74,185 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 11,977 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 14,376 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி தும்மினாலோ, இருமினாலோ அதனால் வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் வழியாகக் கூட கரோனா பரவும் அபாயம் உள்ளது. இதனால் நுண் எச்சில் நீர் துகள்கள் படிந்த கரன்சி நோட்டுகள் மூலமாகமும் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. எனவே, ஹூபே மாகாணத்தின் மருத்துவமனை, ஷாப்பிங் மால்கள், பேருந்துகள் போன்றவற்றில் வசூலான கரன்சி நோட்டுகளை சுத்தம் செய்ய சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. வைரஸ் தொற்று பாதிப்புள்ள பகுதியில் வங்கிக்கு வரும் நோட்டுகளை 14 நாட்கள் அல்ட்ரா வைலட் கதிர்கள் மற்றும் அதிக வெப்பத்தில் வைத்து நோட்டுகளை அழிக்க அனைத்து வங்கிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.