உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த கரோனா பாதிப்பு சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது சீனா, ரஷ்யா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உலகின் மற்ற பகுதிகளிலும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், உலக சுகாதார உச்சி மாநாட்டில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், கரோனாவைப் பரவலை முடிவுக்குக் கொண்டுவருவது நம் கைகளில்தான் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, "உலகம் அதை முடிவுக்குக் கொண்டுவர நினைக்கும்போது தொற்றுநோய் பரவல் முடிவடையும். அது நம் கையில்தான் உள்ளது. பயனுள்ள பொதுச் சுகாதார கருவிகள் மற்றும் பயனுள்ள மருத்துவ கருவிகள் என நமக்குத் தேவையான அனைத்து கருவிகளும் உள்ளன. ஆனால் உலகம் அந்த கருவிகளைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. ஒரு வாரத்திற்குக் கிட்டத்தட்ட 50,000 பேர் இறக்கிறார்கள். தொற்றுநோய் முடிவடைவதற்கான நேரம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.