பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு 2024 பிப்ரவரி 8 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு தவித்து வரும் நிலையில், இன்னும் சில நாட்களில் அந்நாடு பொதுத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீக் லீக்-என், இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக் - இ- இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக இந்து மதத்தைச் சேர்ந்த சவேரா பிரகாஷ் என்ற பெண் முதல் முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
கைபர் பக்டுங்க்வா மாகாணத்தின் புகோர் மாவட்டத்தைச் சேர்ந்த சவேரா பிரகாஷின் தந்தை ஓம் பிரகாஷ் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் கடந்த 35 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வருகிறார். தனது தந்தையின் அடியை பின்பற்றி, பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண் என்ற பெருமையை சவேரா பிரகாஷ் பெற்றுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றிருக்கும் சவேரா பிரகாஷ், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் புனேர் மாவட்ட அணி மகளிர் அணி பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.