நியூயார்க் நகரை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், கடந்த பல நாட்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் பல் வலியை நீக்குவதற்கான வலி நீக்கி க்ரீம் ஒன்றை பற்களின் மேற்புறத்தில் அவர் தடவியுள்ளார்.
அவர் இந்த க்ரீமை தடவிய அடுத்தநாள் காலை தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார். அப்போது தனது உடல் முழுவதும் நீல நிறச் சாயம் பூசியது போன்று மாறியுள்ளதை கண்டு அப்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு, ரத்த பரிசோதனைக்காக ரத்தம் எடுக்கப்பட்டது. அப்போது அவரது ரத்தம் முழுவதும் அடர் நீலநிறமாக மாறி இருந்துள்ளது.
இந்நிலையில் அப்பெண்ணுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நீல நிறத்தில் ஒருவரின் உடல் மாறுவதற்கு 'சயனோட்டிக்' என்று பெயர். ரத்தம் நீல நிறமாக மாறுவதற்கு 'மெதெமோகுளோபினிமியா' என்று பெயர். ஒருவரின் உடலிலுள்ள ரத்தத்தில் இரும்புச்சத்து வேறொரு தன்மையை அடையும்போது ரத்தம் நீல நிறமாக மாறலாம் என இதுகுறித்து மருத்துவ ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.