அண்மையில் லட்சத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி ஆழ்கடல் பகுதியில் நீந்தி பவளப்பாறைகளை படம் பிடித்த காட்சிகள் வெளியாகி இருந்தது. அதேபோல் கடற்கரை பகுதியில் அமர்ந்து சிந்திப்பதை போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பாஜகவினரால் 'ட்ரெண்ட்' செய்யப்பட்டது. அதே நேரம் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது.
இந்நிலையில் பிரதமர் மோடி ஆழ்கடலில் நீந்தியது பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக மாலத்தீவை சேர்ந்த மூன்று அமைச்சர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 'உயிர்காக்கும் உடை அணிந்த நரேந்திர மோடி இஸ்ரேலின் கைப்பாவை' என லட்சத்தீவு அமைச்சர் மரியம் ஷியுனா குறிப்பிட்டிருந்தார். அதேபோல மற்ற அமைச்சர்களான மல்சா, ஹசன் ஹிஜான் ஆகியோர் மோடியை விமர்சிக்கும் வகையில் கருத்து பதிவிட்டிருந்தனர். இந்த கருத்துக்கள் பல்வேறு விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து மூன்று அமைச்சர்களின் கருத்துக்கும் மாலத்தீவு அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் வெளியாகியது.
மூன்று அமைச்சர்கள் கருத்துக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் மற்றும் முன்னாள் அமைச்சர் அப்துல்லா ஷாகித் ஆகியோர் கண்டம் தெரிவித்திருந்தனர். கடும் கண்டனம் எழுந்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட மூன்று மாலத்தீவு அமைச்சர்களும் நீக்கம் செய்து மாலத்தீவு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு இந்தியாவும் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத் தகுந்தது.