சூடானில் நடந்த உள்நாட்டுப்போரில் இந்தியர் ஒருவர் பலியாகியுள்ளார்.
சூடானை கடந்த 2021 ஆம் ஆண்டில் ராணுவம் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் துணை ராணுவப்படைகளை ராணுவத்தில் இணைப்பது தொடர்பாக ராணுவத் தளபதிக்கும் துணை ராணுவ கமாண்டருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
அப்போதில் இருந்தே அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது உள் நாட்டுப் போர் நடந்து வந்த நிலையில் நேற்று சூடான் தலைநகரில் ராணுவத்தினருக்கும் துணை ராணுவத்தினருக்கும் போர் நடந்து வருகிறது. சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம் அதிபர் மாளிகை ஆகியவற்றை கைப்பற்றியதாக துணை ராணுவம் அறிவித்தது.
தொடர்ந்து நடந்த போரில் பொதுமக்கள் 56 பேர் கொல்லப்பட்டனர். இந்தியர் ஒருவரும் இதில் கொல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இறந்தவரின் பெயர் ஆல்பர்ட் அகஸ்டின் என்றும் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்திருப்பதாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. ட்விட்டரில் தூதரகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “சூடானில் உள்ள டால் குரூப் நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரு ஆல்பர்ட் ஆஜெஸ்டின், நேற்று வழி தவறிய புல்லட் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலதிக ஏற்பாடுகளைச் செய்ய குடும்பம் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்திய தூதரகம், சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், நிதானமாக செயல்பட்டு வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.