இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படும் இந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் மாலை வரை உணவு, நீர் என எதுவும் உட்கொள்ளாமல் நோண்பு கடைபிடிப்பார்கள். இப்படி நோண்பு இருப்பது இஸ்லாம் கூறும் முக்கியமான ஐந்து கடமைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அப்படி இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நோண்பை அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மேற்கொள்ளக்கூடாது என சீனாவில் உள்ள ஸிங்ஜியாங் மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அம்மாகாணத்தில் இயங்கிவரும் அனைத்து ஹோட்டல்களையும் திறந்து வைக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய அரசு அதிகாரி ஒருவர், "ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோண்பு மேற்கொள்ள கூடாது, இறை வழிபாடு மேற்கொள்ள கூடாது மேலும் மதம் சார்ந்த எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன் பிறகு உள்ளூர் அரசு வலைதளத்தில் பதிவிடப்பட்டது" கூறினார்.
ஆண்டுதோறும் ரமலான் காலகட்டத்தில் அம்மாகாண அரசு இதுபோன்ற விதிமுறைகளை தொடர்ந்து அமல்படுத்துவதால் அங்கு நோண்பு காலகட்டத்தில் தொடர்ந்து கலவரங்கள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்த வருகின்றனர். இருப்பினும் அரசாங்கம் ஆண்டுதோறும் இந்த நடைமுறையை தீவிரப்படுத்தி வருகிறது என்ற கருத்தே அங்கு நிலவுகிறது.