Skip to main content

ஏழையாக இறக்க விரும்பும் கோடீஸ்வரர்... 59,000 கோடி ரூபாய் சொத்துகளைத் தானமளித்தார்...

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

chuck feeney donates his entire fortune

 

 

ஏழையாக இறக்க விரும்புவதாக தெரிவித்திருந்த பிரபல தொழிலதிபர் சக் ஃபீனி, தனது சொத்துகள் முழுவதையும் தானமாக வழங்கியுள்ளார். 

 

89 வயதான சார்லஸ் சக் ஃபீனி,1960 ஆம் ஆண்டு ராபர்ட் மில்லர் என்பவருடன் இணைந்து டூட்டி ஃப்ரீ ஷாப்பர் கடைகளைத் திறந்தார். தொடர் உழைப்பின் பலனாக பல நாடுகளில் தங்களது வணிகத்தை விரிவு செய்த இவர்கள் அமெரிக்காவின் முக்கிய பணக்காரர்களாகவும் மாறினர். ஆரம்பகாலகட்டம் முதலே மற்றவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் கொண்டிருந்த ஃபீனி, மிகப்பெரிய அளவிலான தொகையை அறக்கட்டளைகளுக்கு வழங்கி வந்தார். மேலும், தான் இறக்கும் போது ஏழையாக இருக்க விரும்புவதாகவும் இவர் தெரிவித்திருந்தார்.

 

இவர் இதுவரை குழந்தைகளின் கல்விக்கு மட்டும் சுமார் 3.7 பில்லியன் டாலரை நன்கொடையாகக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அல்மா மேட்டர் கார்னலுக்கு கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் மற்றும் வியட்நாமில் சுகாதாரத்தை மேம்படுத்த 270 மில்லியன் டாலர் எனப் பல உலக நாடுகளுக்கும் இவர் தொடர்ந்து உதவி வந்தார். பில்கேட்ஸ், வாரென் ஃபபெட் உள்ளிட்ட பல கோடீஸ்வரர்களுக்கும் தானமளிப்பதில் முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர் இவர். 40 ஆண்டுகாலமாக நன்கொடை வழங்கிவந்த இவர், ஏழையாக இறக்க வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், தனக்கு சொந்தமான 58,888 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பல்வேறு அறக்கட்டளைகள் வழியாக நன்கொடையாக வழங்கியுள்ளார்.

 

இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டும் தனக்காகவும் தனது மனைவிக்காகவும் வைத்துக்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு சிறிய வீட்டில், தனது மனைவியுடன் குடியேறியுள்ளார். இந்த நன்கொடைகள் பற்றி பேசியுள்ள அவர், "நாங்கள் நிறையக் கற்றுக்கொண்டோம். நாங்கள் சில விஷயங்களை வித்தியாசமாக செய்தோம். ஆனால் இதனால் நான் மிகவும் திருப்தி அடைகிறேன். எனது காலகட்டத்திலேயே இதைசெய்து முடிப்பதைப் பற்றி நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். இந்த பயணத்தில் எங்களுடன் இணைந்த அனைவருக்கும் எனது நன்றி. வாழும்போது கொடுப்பதை பற்றி யோசிப்பவர்கள் அனைவரும் இதை முயலவும், நீங்கள் கண்டிப்பாக இதனை விரும்புவீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்