பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன், ஏ பெட்டர் டுமாரோ போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் சவ் யுன் ஃபேட். ஹாங்காங் நடிகரான இவர் கடந்த ஆண்டு அதிகம் சம்பாதிக்கு உலக நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். இந்நிலையில் தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனக்கு சொந்தமான 5000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மக்களுக்கு தானமாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். பில்கேட்ஸ், வாரென் புபட் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட இதற்கான ஒரு இயக்கம் மூலம் உலக கோடீஸ்வரர்கள் தங்கள் சொத்தின் ஒரு பகுதியை மக்களுக்கு தானமாக வழங்கி வருகின்றனர். அதுபோலத்தான் நானும் வழங்கினேன் என இது பற்றி அவர் கூறினார்.
மேலும் அவர், 'பணம் எப்போதும் நம்முடன் இருக்கப்போவதில்லை. ஒருநாள் இந்த உலகைவிட்டுப் போகும்போது நீங்கள் உங்கள் உடைமைகளை விட்டுச் செல்ல வேண்டும். உங்கள் பொருட்கள் உங்களுக்குப் பின் மற்றவர்களுக்குப் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும். நாங்கள் ஒருகாலத்தில் பரம ஏழைகளாக இருந்தோம். அப்போதெல்லாம் உருளைகிழங்கும், கொஞ்சம் காய்கறியும் சாப்பிடக் கிடைத்தாலே மகிழ்ச்சியடைந்துவிடுவேன். புத்தாண்டு பிறப்பன்று கறியோ கோழியோ கிடைத்துவிட்டால் பேரானந்தம் வந்துவிடும்" என கூறினார்.