ஈராக் நாட்டில் மூக்கிலிருந்து ரத்தம் வடியச் செய்யும் புதிய காய்ச்சலுக்கு பலர் உயிரிழப்பது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் நாட்டில் கடந்த சில வாரங்களாக இந்த காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. சுமார் 43 ஆண்டுகளுக்கு முன்பே இந்த காய்ச்சல் அங்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்,தற்போதைய காய்ச்சல் பரவலில் இதுவரை பாதிக்கப்பட்ட 111 பேரில் 19 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு வகையான உண்ணி தாக்குதலுக்கு ஆளாகும் கால்நடைகளை வெட்டும் போது அதனால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு இக்காய்ச்சல் ஏற்படுவதாக முதல் கட்டமாகக் கண்டறிந்துள்ளார்கள். இந்த காய்ச்சலை கிரிமியன் காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் என்று கூட சிலர் அழைக்கிறார்கள். மூக்கில் ரத்தம் வருவதே இந்த காய்ச்சலின் முதல் அறிகுறி. இந்த நோய் பாதிக்கப்படும் ஐந்தில் ஒருவர் பலியாக அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல, இந்நோய்க்கு இதுவரை தடுப்பூசி எதுவும் கண்டறியப்படவில்லை என்பதும் மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.