சீனாவில் கடந்த 60 ஆண்டுகளாக இல்லாத வகையில் தற்போது மக்கள் தொகை முதல்முறையாக குறைந்துள்ளது. சீன பெண்கள் திருமணம் செய்து கொள்வதை விரும்புவதில்லை என்றும், அப்படியும் திருமணம் செய்துகொண்டால் ஒரு குழந்தை அல்லது குழந்தை பெற்றுக் கொள்ளாமல் வாழ்க்கையை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் வரும்காலத்தில் சீனாவில், வேலைகளில் மனித ஆற்றல் குறைந்து பொருளாதார வளர்ச்சியில் பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த கல்லூரி மாணவர்கள் காதல் செய்ய ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொகையை அதிகப்படுத்த சீனா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முதற்கட்ட முன்னெடுப்பாக, சீனாவில் உள்ள 9 கல்லூரிகளுக்கு வசந்த காலத்தை கொண்டாடி மாணவர்கள் காதல் செய்ய ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வசந்த கால விடுமுறை, மாணவர்களின் எல்லையை விரிவுபடுத்துவதோடு அவர்களின் உணர்வை வளர்க்கும் என்றும் கல்லூரி தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.