உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிவந்த நிதியுதவிகளை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதற்குச் சீனா கவலை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.34 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5.1 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கிப்போயுள்ள சூழலில், இவ்வளவு பெரிய நோய்த்தொற்று ஏற்பட உலக சுகாதார அமைப்பின் அஜாக்கிரதையே காரணம் எனக் கூறிய ட்ரம்ப், அந்த அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செய்யப்படுவதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இந்நிலையில் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கிவந்த நிதியுதவியை நிறுத்துவதாக ட்ரம்ப் நேற்று அறிவித்தார்.
அமெரிக்காவின் இந்த முடிவு ஐநா முதல் பல உலக நாடுகள் வரை, பல்வேறு தரப்பினரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அமெரிக்கா நிதியை நிறுத்துவதற்கு உகந்த நேரம் இதுவல்ல என ஐநா சபை கவலை தெரிவித்தது. இந்நிலையில் இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிய நிதியை நிறுத்திய அமெரிக்காவின் முடிவு மிகுந்த கவலையை அளித்துள்ளது. இது ஒரு முக்கியமான காலகட்டம். இந்த நேரத்தில் அமெரிக்காவின் முடிவு உலக சுகாதார அமைப்பின் திறன்களைப் பலவீனப்படுத்தும். தொற்றுநோய்க்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பைக் குறைக்கும்" எனத் தெரிவித்துள்ளது.