பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா ஐ.நா.வில் மேற்கொண்ட முயற்சிகளை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் பலமுறை தடுத்துவிட்டது.
அதேபோல பிரான்ஸ் சார்பில் நேற்று மீண்டும் ஐ.நா வில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையையும் சீனா தனது வீட்டோ அதிகாரத்தால் தடுத்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பின் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சியை பிரான்ஸ் முன்னெடுத்துள்ளது.
ஏற்கனவே இந்த விவகாரம் பற்றி சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகையில், "சீனா தொடர்ந்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளும், ஐநா பாதுகாப்பு கவுன்சில் 1267 குழுவின் ஆய்வில் பங்கு கொள்ளும்" என தெரிவித்தார். ஏற்கனவே கடந்த முறையும் இந்த விவகாரத்தில் சீனா இதைதான் கூறியது, ஆனால் ஐ.நா வில் இந்தியாவின் தீர்மானத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது.
அதுபோல இந்த முறையும் நடக்கலாம் என இந்தியா கருதிய நிலையில் தற்போது மீண்டும் சீனா அதையே செய்துள்ளது. நேற்று ஜெனிவாவில் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டபோது சீனா மீண்டும் தனது அதிகாரத்தால் இதனை தடுத்துள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சீனாவின் இந்த நடவடிக்கையால் ட்விட்டரில் சீனாவை எதிர்த்து இந்திய அளவில் ஹாஷ்டாக்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.