இந்திய, சீன ராணுவவீரர்களுக்கு இடையேயான மோதலுக்கு முன்பு, எல்லைப்பகுதியில் தற்காப்புக் கலை படைப்பிரிவைச் சீனா குவித்திருந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக லடாக் எல்லைப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே பதட்டமான சூழல் நிலவிவந்த நிலையில், இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் கடந்த 15 ஆம் தேதி இரவு நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இரு நாட்டு உறவில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ள சூழலில், எல்லைப்பகுதியில் துப்பாக்கி, வெடிமருந்து உள்ளிட்ட ஆயுதங்கள் பயன்படுத்த கூடாதென்ற விதிமுறையால், தாக்குதலுக்கு முன்னரே தற்காப்புக் கலை படைப்பிரிவைச் சீனா ராணுவத்தில் சேர்த்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மவுண்ட் எவரெஸ்ட் ஒலிம்பிக் டார்ச் ரிலே அணியின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் கலப்பு தற்காப்புக் கலை வீரர்கள் உட்பட ஐந்து புதிய பிரிவுகளை ஜூன் 15 அன்று திபெத்தின் தலைநகரான லாசாவில் ஆய்வுக்காகச் சீனா அனுப்பி வைத்ததாகச் சீனாவின் அதிகாரப்பூர்வ இராணுவ செய்தித்தாள் செய்தி தெரிவித்துள்ளது. இந்தப் படைகள், பின்னர் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. எல்லைப்பகுதியில் வெடிமருந்து கொண்ட ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தைக் கருத்தில்கொண்டு, சீனா முன்கூட்டியே திட்டமிட்டு தற்காப்புக்கலை வீரர்களை அப்பகுதிக்கு நகர்த்தியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் இந்த வீரர்கள் ‘என்போ பைட் கிளப்' என்ற அமைப்பைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த அமைப்பின் தலைவரிடம் ஊடகங்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, அவர் அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.