உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகும் அமெரிக்காவின் முடிவு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என சீனா விமர்சித்துள்ளது.
கரோனா பரவல் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பை தொடர்ந்து விமர்சித்துவந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த அமைப்புக்கு வழங்கிவந்த நிதியுதவியை நிறுத்துவதாக அண்மையில் அறிவித்தார். அதுமட்டுமல்லாது அந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா விரைவில் விலகும் எனவும் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். இதனை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுவதற்கான அறிவிக்கை கடிதத்தை ஐ.நா. சபையில் அமெரிக்கா நேற்று சமர்ப்பித்துள்ளது. இதனை ஐ.நா. சபையும் உறுதி செய்துள்ள சூழலில், 2021-ஆம் ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி முதல் அமெரிக்காவின் இந்த முடிவு நடைமுறைக்கு வரும் என ஐ.நா. செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன், “ஒப்பந்தங்களை மீறுதல், அமைப்பிலிருந்து விலகுதல் போன்றவை அமெரிக்காவின் ஒருதலைபட்ச நடவடிக்கையைக் காட்டுகிறது. உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வ அமைப்பாகும். அமெரிக்காவின் இந்த விலகல் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.