மனிதர்கள் மூலம் பரவும் கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவில் பரவிய நிலையில் ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இதன் பாதிப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் நோயை ஏற்படுத்திய அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் தான் இந்த கரோனா என கூறப்படுகிறது. சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து உள்ளது இந்த கரோனா வைரஸ். இந்த வைரஸ்கள் பாம்புகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் குறித்த அச்சத்தால் வூஹான் நகரம் முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது.
வூஹான் நகரத்தை தொடர்ந்து ஷாங்காய், பெய்ஜிங், தியான்ஜின், சோங்கிங் ஆகிய நகரங்களுக்கும் கரோனா வைரஸ் பரவி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சுமார் 3 கோடி பேர் வெளி உலகுடனான தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சீன அரசு மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறது. 1000 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையை 6 நாட்களில் கட்ட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 3ம் தேதி இந்த மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.