Skip to main content

"அவர் பேச்சைக் கேட்டிருந்தால் வைரஸ் பரவியிருக்காது"- மன்னிப்பு கேட்ட சீனா...

Published on 20/03/2020 | Edited on 20/03/2020

கரோனாவை முதன்முதலில் கண்டுபிடித்து, எச்சரித்த மருத்துவரிடம் சீனா மன்னிப்பு கேட்டுள்ளது. 

 

china apologise to doctor lee who found corona outbreak in china

 

 

வுஹான் நகரின் சென்ட்ரல் மருத்துவமனையில் பணியாற்றி வந்த லீ எனும் மருத்துவர், கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி, நோயாளி ஒருவரைப் பரிசோதித்துள்ளார். அப்போது அவருக்கு சார்ஸ் வைரஸ் தொற்று இருக்கலாம் என லீ சந்தேகித்துள்ளார். இதுகுறித்து சக மருத்துவர்களிடம் எச்சரித்தும் உள்ளார். மேலும், மருத்துவர்களையும் முகக்கவசம் அணியும்படி வலியுறுத்தியுள்ளார். ஆனால் இதனை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளாத சூழலில், சுகாதாரத் துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் மருத்துவர் லீயை சந்தித்து, சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் இவ்வாறான பொய் தகவல்களைப் பகிர்வதை நிறுத்தும்படி கூறி, அவரிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றுச் சென்று இருக்கிறார்கள். இருப்பினும் இதுகுறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் மருத்துவர் லீ பதிவிட்டுள்ளார்.

இந்தச் சூழலில் தான் சீனாவில் கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது கண்டறியப்பட்டது. மிக வேகமாகப் பரவிய இந்த கரோனா மருத்துவர் லீயையும் தாக்கியது. கரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் லீ சிகிச்சை பலனின்றி பிப்ரவரி ஏழாம் தேதி உயிரிழந்தார்.  

சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது. சீனாவில் 80,967 பேர் பாதிக்கப்பட்ட இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர். இதன் தாக்கம் தற்போது சீனாவில் சற்று குறைந்துள்ள நிலையில், மருத்துவர் லீயிடம் சீனா மன்னிப்பு கேட்டுள்ளது.

இதுகுறித்து வுகான் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லீ வென்லியாங் எங்களுக்கு கரோனா குறித்து முதலில் சொன்னவர். ஆனால் அவர் பேச்சை நாங்கள் மதிக்காமல் அவர் மீது வழக்குப் பதிவு செய்தோம். நாங்கள் செய்தது தவறு. இனி இதை எங்களால் மாற்ற முடியாது.

அவர் சொன்ன போதே நாங்கள் துரிதமாகச் செயல்பட்டு இருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் வைரஸ் பரவுவதைத் தடுத்திருக்க முடியும். இவ்வளவு பேர் பலியாகி இருக்க மாட்டார்கள்.  

மக்களுக்காக உயிர் துறந்த லீ வென்லியாங்கிடமும் அவரின் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். மேலும் அவருக்கு எதிரான வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்