பெற்ற தாயை பட்டினி போட்டு, உடலில் சூடுவைத்து, கொடுமைப்படுத்தி அவரின் மரணத்துக்குக் காரணமாக இருந்ததாக 29 வயது இந்தியர் மற்றும் அவரின் மனைவி மீது துபாய் நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரை அந்த பெண்ணை கொடுமை செய்து இறுதியில் கடந்த அக்டோபர் 31-ம் தேதி இறந்துள்ளார். இது குறித்து இவர்களின் எதிர் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய அந்த எதிர்வீட்டு பெண், "29 வயது இந்தியரும், அவரின் மனைவியும் வசித்த அதே குடியிருப்பில், அவர்களின் எதிர் வீட்டில் தான் நான் குடியிருக்கிறேன். ஒருநாள் என்னிடம் அந்த இந்தியரின் மனைவி வந்து என் அத்தை இந்தியாவிலிருந்து வந்துள்ளார், அங்கு அவரின் மகள் அவரை சரியாகப் பராமரிக்கவில்லை. எனவே இனி அவர் இங்குதான் இருப்பார் என கூறினார்.
பிறகு ஒரு நாள் அந்த இந்தியர் வீட்டு மாடியில் அந்த வயதான பெண் நிர்வாணமாகக் கிடந்தார். உடல் முழுவதும் சூடு வைக்கப்பட்டு காயங்களுடன், அழுதுகொண்டே, வலியால் துடித்தார். நான் அந்த இந்தியரின் வீட்டு கதவைத் தட்டி, உங்கள் அத்தை மாடியின் முற்றத்தில் விழுந்து கிடக்கிறார். வலியால் துடிக்கிறார். உடனடியாக காப்பாற்றுங்கள் என்று கூறி ஆம்புலன்ஸை அழைக்கிறேன் என்றேன். அப்போது அந்த தாயின் அழுகுரல், வலியால் துடித்த குரல் என் காதில் ஒலித்தது வேதனையாக இருந்தது.
பிறகு ஆம்புலன்ஸ் வந்தவுடன், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உதவியுடன் அந்த வயதான தாயை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தேன். அவரின் மகன் அப்போது கூட உதவி செய்யவில்லை" என கூறியுள்ளார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது வெறும் 29 கிலோ எடை மட்டுமே இருந்தார்.மேலும் கை, கால் எலும்புகள் முறிக்கப்பட்டு வீக்கத்துடன், உடல் முழுவதும் பல்வேறு சூடு காயங்களுடன், கண் கருவிழிகள் சிதைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிறகு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். தற்போது இது குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் அந்த தம்பதிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.