காட்டுத் தீ, சூறாவளியைத் தொடர்ந்து தற்போது பெருமழை ஆஸ்திரேலியாவை நிலைக்குலையச் செய்து வருகிறது. இந்த பெருவெள்ளம் காலநிலை மாற்றத்தை உணர வேண்டியதன் அபாய மணி என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
குடியிருப்புகளை மூழ்கடிக்கும் வெள்ளம்; மின்சாரம் இல்லை. உயரமான இடங்களைத் தேடி செல்லும் மக்கள் என ஒரு வாரமாக ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியை கனமழை புரட்டிப் போட்டு வருகிறது. இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக, குயின்ஸ்லாந்து, நியூ சவுத்வேல்ஸ் மாகாணங்களில் அதிகனமழை கொட்டி வருகிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை விமானம் மூலம் அந்நாட்டு அரசு மீட்டு வருகிறது.
மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பணியை அரசு முடுக்கிவிட்டாலும், அவற்றைத் தொடர வெள்ளநீர் வடியும் வரை, காத்திருக்க வேண்டும். வரலாறு காணாத வகையில் பெய்து வரும் மழைக்கு காலநிலை மாற்றமே காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
காலநிலை மாற்றத்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்கும் நாடுகளில் ஆஸ்திரேலியா முன்னணியில் இருப்பதாக, அவர்கள் கவலைப்படுகின்றன. வெப்பநிலை உயர்வில் உலக சராசரியை விட, ஆஸ்திரேலியாவின் வெப்பநிலை உயர்வு அதிகரித்துள்ளது. அதனால் காட்டுத் தீ, வறட்சி, சூறாவளி, மழைப்பொழிவு எல்லாம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கோடைக்காலங்களில் கூட திடீரென கொட்டும் மழையால், நகரமே வெள்ளக்காடாக மாறிவிடுகிறது. இதற்கு மேலும் புவி வெப்ப மயமாதலைத் தடுத்து, காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தவறினால், மனிதகுலம் மிகப்பெரிய அபாயத்தில் சிக்கிவிடும் என்று கலக்கத்தோடு கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.