
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரில் உள்ள பேருந்து நிலையம் சிதிலமடைந்து போயிருந்ததால் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் நகராட்சி நிர்வாகம் 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது 80 சதவீத பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து பேருந்து நிலையத்திற்குள் புதியதாக கழிப்பிடமும் கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பிடத்திற்குத் தந்தை பெரியார் பேருந்து நிலைய கட்டண கழிப்பறை என பெயரைச் சூட்டி உள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது. புதிய பேருந்து நிலையத்திற்கு தந்தை பெரியார் பேருந்து நிலையம் என பெயர் சூட்டுவதாக தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கழிவறைக்கும் பெரியார் பெயர் வைத்திருப்பது ஆளுங்கட்சியினரையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

வழக்கமாக கழிவறைகளுக்கு எந்த ஒரு தலைவரின் பெயர்களையும் சூட்ட மாட்டார்கள், நவீன கட்டண கழிப்பிடம், நகராட்சி நவீன இலவச கழிப்பிடம் என்று மட்டுமே பெயர் வைப்பார்கள். கழிப்பிடத்திற்குத் தலைவரின் பெயர்களை வைத்து அவர்களை அவமானப்படுத்த மாட்டார்கள். அதற்கு மாறாக தந்தை பெரியார் பெயரில் கழிப்பிடத்திற்குப் பெயர் வைத்திருப்பது பெரியார் பற்றாளர்கள் மற்றும் ஆற்காடு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நகர மன்ற தலைவர் திமுகவைச் சேர்ந்த தேவி பென்ஸ் பாண்டியன் இந்த புதிய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து செய்தார். அப்பொழுது சேர்மனின் கணவர் பென்ஸ் பாண்டியன், நவீன கட்டண கழிப்பிடம் என்பதற்கு பதில் தந்தை பெரியார் பேருந்து நிலைய கட்டண கழிப்பிடம் என வையுங்கள் எனக் கூறியதாகவும் அதிகாரிகள் அதை ஏற்றுக்கொண்டு அப்பெயரை முகப்பில் வைத்ததாகவும் கவுன்சிலர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.