
பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பேரவையில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் எம்எல்ஏ வேல்முருகன் வெளியேற்றப்பட்டுள்ளார்.
தான் வெளியேற்றப்பட்டது குறித்து வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''தமிழ் வழியில் படித்த தமிழ்நாடு இளைஞர்களுக்கு தமிழ்நாடு காவல்துறையில் வேலை வாய்ப்பு கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மறுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் மறுக்கப்பட்ட போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் என்னிடம் முறையிட்டதன் காரணமாக நான் மதுரைக்குச் சென்று மதுரை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் அவர்களை ஏற்பாடு செய்து ஒரு வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கில் 'தமிழ் வழியில் படித்தவர்களுக்கு டைரக்ட் எஸ்ஐ என்கின்ற பணிக்கு அவர்கள் தகுதியானவர்களாக வர மறுக்கிறார்கள். அதற்கு காரணம் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளிடத்திலே வழக்குகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்வதற்கும் ஆங்கில புலமையோடு வழக்குகளை கையாள தெரியாத காரணத்தினால் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் கலைஞர் கொண்டு வந்த, தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% வேலை வாய்ப்பு; தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்கின்ற சட்டத்தை ஒரு துறை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தாமல் இருந்திருக்கிறது' என அறிந்தேன். இதை நான் கண்டுபிடித்து அஜ்மல் கான் மூலமாக அன்றைய நீதிபதிகள் பிரபாகரன் புகழேந்தி இருவர் கவனத்திற்கு எடுத்துச் சென்றபோது, அவர் தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படித்து விட்டு வேலை கேட்காமல் லண்டனிலா வேலை கேட்பார்கள். தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் துறையின் சார்பாக டிஜிபியும் தமிழ்நாட்டின் உடைய அட்வகேட் ஜெனரலையும் மதுரைக்கு அழைத்து நீங்கள் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார்கள். அப்படி அதை நடைமுறைப்படுத்தியவன் வேல்முருகன்.

இதைத்தான் நான் சட்டமன்றத்தில் இன்று எழுந்து சொன்னேன். கடந்த கால ஆட்சியில் இந்த மாதிரி சட்டம் இருந்தும் காவல்துறையில் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அதனால் உயிரினும் மேலான என் தாய்மொழி தமிழ் மொழியை தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக, பாட மொழியாக, பயிற்று மொழியாக கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதேபோல பக்கத்தில் தெலுங்கானாவில் 25/02/2525-ல் ஒரு அரசாணை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் தெலுங்கானாவில் இருக்கும் சிபிஎஸ்இ / ஐசி / எப்ஐபி உள்ளிட்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளிகளில் கண்டிப்பாக தெலுங்கை பயிற்றுவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்கள். அதுபோன்று தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கருத்துக்களை பதிவு செய்ய நேரம் கேட்டேன்.
நான் என்ன சொல்ல வருகிறேன் என புரிந்து கொள்ளாமல் அதிமுக உறுப்பினர்களும் கத்துகிறார்கள், அமைச்சரவையில் இருக்கின்ற சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்களும் கத்துகிறார்கள். நான் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டு போராடிக் கொண்டிருக்கிறேன். வாய்ப்பு மறுக்கப்பட்டது. நேரம் கொடுங்கள் என கேட்டேன். அது தவறா? இதற்கு சேகர்பாபு 'நீ எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை மாதிரி முந்தி பேசுகிறாய். எல்லாம் தெரிந்ததை போல் பேசுகிறாய்'' என ஒருமையில் பேசினார். உடனே அவர் இடத்தில் சென்று இதுபோல் என்னிடத்தில் ஒருமையில் பேசக்கூடாது என்றேன்.
நான் அதிகப்பிரசங்கி தனமாக பேசியதாக சேகர்பாபு குறிப்பிட்ட நிலையில் தமிழக முதல்வரும் சேகர்பாபு சொன்னதை போல் நான் அதிகப்பிரசங்கி தனமாக நடந்து கொண்டதாக அதே வார்த்தையை முதல்வர் சொன்னது உண்மையிலேயே எனக்கு வருத்தம் அளிக்கிறது'' என்றார்.