மெக்ஸிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் அமெரிக்காவில் கடந்த வாரம் அதிபர் டிரம்ப் அவசர நிலையை அமல்படுத்தினார். மெக்சிகோ வழியாக அனுமதியின்றி அமெரிக்கா வருபவர்களை தடுக்கும் விதத்தில் அமெரிக்க எல்லையில் பிரமாண்ட தடுப்புச்சுவர் கட்ட அதிபர் டிரம்ப் திட்டம் ஒன்றை முன்மொழிந்தார். இந்த திட்டத்திற்கான நிதியாக 40,540 கோடி தேவைப்பட்ட நிலையில், இது தொடர்பான மசோதாவிற்கு எதிர் கட்சியான ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அமெரிக்காவில் ஷட்டவுன் நிலையை அறிவித்தது டிரம்ப் அரசு.
இதனால் அமெரிக்காவின் ஓட்டுமொத்த அரசாங்க செயல்பாடுகளும் கடந்த இரண்டு மாத காலமாக முடங்கின. இதனால் அமெரிக்க பொருளாதாரத்துக்கு சுமார் ரூ.42,600 கோடி இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்தும் சுவர் எழுப்புவதற்கான நிதியை ஒதுக்க எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் கடந்த வாரம் அவசர நிலையை அமல்படுத்துவதாக அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்காவில் உள்ள 16 மாகாணங்கள் இணைந்து கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளன. டிரம்பின் இந்த அறிவிப்பு சட்ட நடைமுறைகளுக்கு எதிரானது எனக்கூறி இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.