வங்கதேச பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை
கடந்த 2000ம் ஆண்டு வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கோபால்கஞ்சில் நடந்த பொது கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, மைதானத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த, இரண்டு சக்தி வாய்ந்த வெடி குண்டுகளை, பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றினர். பிரதமர் ஹசீனாவை கொல்ல, இந்த வெடி குண்டுகளை பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக தடை செய்யப்பட்ட, பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 17 வருடங்களாக டாகா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், பிரதமர் ஹசீனாவை கொல்ல திட்டம் தீட்டியதற்காக, 10 பேருக்கு மரண தண்டனையும், 9 பேருக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி டாக்கா நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு வேறு வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.