கொலம்பியாவின் டாடகோவா பாலைவனம் மற்றும் வெனிசுலாவின் உருமகோ பகுதிக்கு அருகே ஸ்டூபென்டெமிஸ் என அழைக்கப்படும் மிகப்பெரிய ஆமை வகையின் புதிய புதைபடிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
13 அடி (4 மீட்டர்) நீளமுள்ள இந்த ஆமையின் படிமங்கள் மூலம் இதன் எடை சுமார் 1.25 டன் இருந்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இது சுமார் ஒரு கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களின் காலத்தில் வாழ்ந்த 15 அடி (4.6 மீட்டர்) நீளமுடைய ஆர்க்கெலோன் வகை ஆமைக்கு பிறகு, இதுவரை கிடைத்ததில் இதுவே உலகின் மிகப்பெரிய ஆமை வகை ஒன்றின் படிமம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆமை, சிறிய விலங்குகள், மீன்கள், பாம்புகள் மற்றும் தாவரங்கள் ஆகியவற்றை உணவாக உட்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆமை வாழ்ந்த காலத்தில் 36 அடி நீளம் உள்ள மாபெரும் முதலைகளும் வாழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கான சான்றாக ஆமையின் உடல்பகுதியில் 5 அங்குல நீளம் கொண்ட முதலையின் பல் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.