இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முதல்முறையாக இந்தியா வர இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தின் பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு இந்தியாவிற்கு வர வேண்டும் என இரண்டுமுறை பயணத் திட்டங்கள் வகுக்கப்பட்டது. ஆனால் கரோனா பரவல் தீவிரமாக இருந்த நிலையில் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் தடைப்பட்டது. அதனையடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் போரிஸ் ஜான்சன் பங்கேற்க இருந்த நிலையில் அப்பொழுதும் கரோனா காரணமாக அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் 21, 22 ஆகிய 2 தேதிகளில் இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 21 தேதி போரிஸ் ஜான்சன் அங்குள்ள முன்னணி வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார். அதனையடுத்து 22ஆம் தேதி பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். பொருளாதாரம், எரிசக்தி, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து இந்த பேச்சுவார்த்தை அமையும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் குறித்து பிரதமர் மோடியும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.