Skip to main content

மூன்றாவது முறையாக வெள்ளிக்கிழமை தொழுகையை குறித்து தாக்குதல் - ஆப்கானில் தொடரும் ஐஎஸ்-கே அச்சுறுத்தல்!

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

IS K

 

ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்தின் ஸ்பின் கர் பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றில், வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மதியம் 1.30 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக அப்பகுதியில் வசித்து வரும் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் உள்ளூர் பிரிவான ஐஎஸ்-கே பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

 

ஆப்கான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியது முதலே ஐஎஸ்-கே பயங்கரவாதிகள், அந்தநாட்டில் தங்களது தாக்குதல்களை அதிகரித்து வருகின்றனர். அமெரிக்க படைகள் ஆப்கானை விட்டு முழுவதுமாக வெளியேறும் சமயத்தில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியே கூடியிருந்த பொதுமக்கள் மீது மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தி 169 ஆப்கானிஸ்தான் மக்களையும், 13 அமெரிக்க ராணுவ வீரர்களையும் கொன்றனர்.

 

அதன்பின்னர் கந்தஹார் மற்றும் குண்டூஸ் ஆகிய மாகாணங்களில் அமைந்துள்ள இருவேறு மசூதிகளில் அடுத்தடுத்த வெள்ளிக்கிழமைகளில், தொழுகையின்போது மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தி 120க்கும் மேற்பட்டவர்களை கொன்றனர்.

 

அதுமட்டுமின்றி இம்மாத தொடக்கத்தில், அந்தநாட்டின் தலைநகர் காபூலில் அமைந்துள்ள இராணுவ மருத்துவமனை மீதும் ஐஸ்-கே தீவிரவாதிகள் தாக்குதல் 19 பேர் பலியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்