நாம் எதிரெதிர் கட்சியாக இருக்கலாம், ஆனால் எதிரிகள் இல்லை என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை முடிவெடுக்கும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அமெரிக்கத் தேர்தல் முடிவுகளுக்காக உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்க 270 சபைவாக்குகள் தேவை என்ற சூழலில், ஜோ பைடன் 264 வாக்குகளையும், ட்ரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர். பெரும்பான்மைக்கு இன்னும் ஆறு சபைகளின் வாக்குகளே தேவை என்ற நிலையில், பென்சில்வேனியா, நெவேடா, ஜார்ஜியா உள்ளிட்ட தொகுதிகளில் ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். எனவே ஜோ பைடனின் வெற்றி ஏறக்குறைய உறுதியான சூழலில், ட்ரம்ப் தொடர்ந்து அரசியல் மாண்புக்கு மாறாகச் செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், ஜோ பைடன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நாம் எதிரெதிர் கட்சியாக இருக்கலாம், ஆனால் எதிரிகள் இல்லை. நாம் அனைவரும் அமெரிக்கர்கள். நம்முடைய அரசியலின் நோக்கம் இடைவிடாது சண்டையிடுவது மட்டும் கிடையாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.