Skip to main content

பகத்சிங் குற்றமற்றவர் - லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு!

Published on 13/09/2017 | Edited on 13/09/2017
பகத்சிங் குற்றமற்றவர் - லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு!

சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் கொலைக்குற்றவாளி அல்ல என பாகிஸ்தானின் லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



இம்தியாஸ் ரசித் குரேஷி எனும் வழக்கறிஞர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் குற்றமற்றவர் என கடந்த திங்கள்கிழமை லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவர் லாகூரில் பகத்சிங் நினைவு அறக்கட்டளை ஒன்றை லாகூரில் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே இதுகுறித்த வழக்கு தொடரப்பட்டிருந்தபோதிலும், இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படாத நிலையில், இவர் மீண்டும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இவர் தொடுத்துள்ள வழக்கில், சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் குற்றமற்றவர் என அறிவித்து, அவருக்கு தேசிய விருது வழங்கவேண்டும் எனவும் கோரியுள்ளார். மேலும், பிரிட்டிஷ் காவலர்துறை அதிகாரி ஜான் பி.சாண்டர்ஸ் என்பரின் கொலைவழக்கில் பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகிய மூவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். முதலில் ஆயுள்தண்டனை அறிவிக்கப்பட்டு, பின்னர் அவர்களுக்கு 1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதியன்று தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது. இது உண்மையில் ஜோடிக்கப்பட்ட வழக்கு. மேலும், பகத்சிங் மற்றும் அவரது நண்பர்கள் பிரிட்டிஷாரின் காலனியாதிக்க ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கவேண்டும் என்று போராடினார். இது பிரிட்டிஷாரை உருத்தியது. பின்னரே, அவர் இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டார் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு காவல்துறை அதிகாரி சாண்டர்ஸின் கொலைவழக்கு குறித்த முதல் தகவல் அறிக்கையை லாகூரின் காவல்துறையினர் அனார்க்கலி காவல்நிலையத்தில் கண்டுபிடித்தனர். 1928ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு எழுதப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கையில், சாண்டர்ஸைக் கொன்றவர்கள் ‘அடையாளம் தெரியாத நபர்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சற்றும் சம்பந்தமில்லாத பகத்சிங் பின்னர், இதில் தொடர்புபடுத்தப்பட்டு தூக்கிலடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் வழக்கறிஞர் குரேஷி, தான் தொடர்ந்துள்ள வழக்கு இந்த மாதத்திற்குள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்