பொம்மை ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் ஐ.பெரியசாமி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளுக்கு 2 மாதங்களாக திமுக அரசு சம்பளம் வழங்கவில்லை என பழனிசாமி சொன்னதற்கு மத்திய அரசு நிதி தராமல் பாகுபாடு காட்டுவதையும், அதற்கு பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டி சரியான பதிலடி கொடுத்த பிறகும், பாஜகவோடு கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் பழனிசாமி எஜமான் மோடியின் அரசை சீண்டிவிட்டார்களே என மீண்டும் திமுக மீதே பாய்ந்திருக்கிறார்.
பழனிசாமி குறிப்பிடும் ‘மேலே இருப்பவனைத்’ தமிழ்நாட்டின் உரிமைக்காக எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு. பேரிடர் நிதி தொடங்கி ஜி.எஸ்.டி. வரை தமிழ்நாட்டுக்கான நிதியைப் பெறுவதில் உரக்கவே குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறைக்கு எல்லாம் பயந்து ‘மேலே இருக்கிறவன் பார்த்துப்பான்’ என அஞ்சி நடுங்கும் கோழை பழனிசாமிகள் அல்ல நாங்கள்.
அதிமுகவை பாஜகவிடம் அடிமைசாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட பழனிசாமி. இப்போது கூட மத்திய அரசைக் கண்டிக்காமல் திமுகவை மட்டுமே விமர்சிக்கிறார். மத்திய அரசு தர வேண்டிய நிதியைக்கூட திமுக அரசு தரவில்லை என்று தரம் கெட்ட விமர்சனத்தை எல்லாம் டெல்லி கைகாட்டும் போது தஞ்சாவூர் பொம்மையாக ஆடிய ஒரு பொம்மை ஆட்சியை நடத்திய பழனிசாமி மட்டுமே வைக்க முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.