ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 1,000வது நாட்களை கடந்து நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், இந்த போரில் உக்ரனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரம் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. இதற்கிடையே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்திருந்தது. உக்ரைனின் நிப்ரோ நகரத்தை குறிவைத்து, ரஷ்யா இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இனி ஆண், பெண் என இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும் அறிவிப்பு, உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவு, சட்டவிரோத குடியேற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள், பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை ரத்து என பல அதிரடி உத்தரவுகளை அறிவித்து வருகிறார்.
அதன்படி, டொனால்ட் டிரம்ப் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், உக்ரைன் பிரச்சனையில் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் அந்த நாட்டின் மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்குமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், “நான் ரஷ்ய மக்களை நேசிக்கிறேன். ரஷ்ய அதிபர் புடினுடன் எப்போதும் நல்ல உறவைக் கொண்டிருந்தேன். இரண்டாம் உலகப் போரை வெல்ல ரஷ்யா நமக்கு உதவியது. இந்த செயல்பாட்டில் கிட்டத்தட்ட 60,000,000 உயிர்களை இழந்தது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. .
அதே சமயம் உக்ரைனுடான இந்த அபத்தமான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும். இது இன்னும் மோசமாகப் போகிறது. நாம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், ரஷ்யா விற்கும் எந்தவொரு பொருளுக்கும் அதிக அளவிலான வரிகள் மற்றும் தடைகளை விதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. ஒரு போதும் இந்த போர் நடந்திருக்கக் கூடாது. நான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைனில் இந்த போர் நடந்திருக்காது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவோம். நாம் அதை எளிதான வழியிலோ அல்லது கடினமான வழியிலோ செய்யலாம் . ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டிய நேரம் இது. இனி யாரும் உயிர் இழக்கக்கூடாது” என்று கூறினார்.