நாட்டின் 76வது குடியரசு தின விழா ஜனவரி 26ஆம் தேதி (26.01.2025) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார். அதன் பின்னர் பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையைக் குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்வார். இவ்விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தைப் பறைசாற்றும் சாகசங்கள் ஆகியவை நடைபெற உள்ளன.
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வர். அதோடு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவிற்கு வெளிநாட்டுத் தலைவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடியின் அழைப்பின் பெயரில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ வரும் ஜனவரி 25ஆம் தேதி இந்தியா வர இருக்கிறார். 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வரும் அவர் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.
அதே சமயம் தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் சென்னையில் உள்ள காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்படவிருக்கிறது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மறுநாள் (25.01.2025) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (26.01.2025) அன்று மெரினா கடற்கரை, ராஜ் பவன் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது இல்லத்தில் இருந்து மெரினா செல்லும் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில், ட்ரோன்கள் பறக்கவிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவைப் பெருநகர சென்னை போலீசார் பிறப்பித்துள்ளனர்.