அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அங்குத் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளதாக இருந்தது.
இத்தகைய சூழலில் தான் அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாக அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியை சார்பாக தற்போதைய துணை அதிபரரும், ஆப்ரிக்க - இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
பைடன் வேட்பாளராக இருந்த போது ட்ரம்பின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது கமலா ஹாரிஸுக்கு எதிரான தேர்தலில் ட்ரம்புக்கு நெருக்கடி இருப்பதாக அமெரிக்க அரசியலை உற்றுநோக்கும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், பிரச்சாரத்தின் போது கமலா ஹாரிஸ் மீது ட்ரம்ப் பிரயோகிக்கும் வார்த்தைகள் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் ட்ரம்ப் நிறவெறியைத் தூண்டுவதாகவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
அண்மையில் பிரபல டைம்ஸ்(TIMES)பத்திரிகை தனது அட்டை படத்தில் கையால் வரையப்பட்ட கமலா ஹாரிஸின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. இதுகுறித்து பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய ட்ரம்ப், “டைம்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் கமலா ஹாரிஸின் நல்ல புகைப்படம் ஒன்றுகூட இல்லை என்று தெரிகிறது. ஆனால் அவர்களிடம் கைதேர்ந்த சிறப்பான ஓவியக் கலைஞர் உள்ளார். ஏனென்றால், கமலா ஹாரிஸின் உண்மையான தோற்றத்தை விடச் சிறப்பாக இருப்பது போன்று டைம்ஸ் அட்டைப்பக்கத்தில் வரையப்பட்டுள்ளது. இருப்பினும் கமலா ஹாரிஸை புகைப்பட கலைஞர்கள் படம் பிடித்திருப்பார்கள். ஆனால் அட்டைப்படத்தில் வெளியிடும் அளவிற்குச் சிறப்பாக இருந்திருக்காது. அதனால் தான் படத்தை வரைய வேண்டிய நிலைக்கு டைம்ஸ் இதழ் தள்ளப்பட்டுள்ளது” என்றார்.
ட்ரம்பின் பேச்சு உருவகேலி மற்றும் நிற வெறியைத் தூண்டும் வகையில் இருப்பதாகப் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மற்றொரு கூட்டத்தில் பேசிய அவர், “ஜோ பைடனை விடக் கமலா ஹாரிஸை தோற்கடிப்பது மிகவும் எளிது. அவரது சிரிப்பை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? அது ஒரு முட்டாளின் சிரிப்பைப் போன்று இருக்கும். கமலா ஹாரிஸை விட நான் அழகானவன்” என்றார். இப்படியாகத் தொடர்ந்து கமலா ஹாரிஸின் தோற்றத்தையும் நிறத்தையும் குறிப்பிட்டு தனிமனித தாக்குதலை ட்ரம்ப் தொடர்ந்து வருவதால் அமெரிக்கத் தேர்தலும் பரபரப்பு நிலவி வருகிறது.