Skip to main content

பெய்ரூட் விமான நிலையம் அருகே தாக்குதல்; கட்டடங்கள் தரைமட்டம்!

Published on 14/11/2024 | Edited on 14/11/2024
Beirut Airport near incident Buildings are ground level 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியுள்ளது. அந்த அமைப்பு இஸ்ரேல் மீது குண்டுவீசித் தாக்குதல், ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் என இஸ்ரேலுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறித்து வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதே சமயம் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீதும் தொடர் தாக்குதலை நடத்திவரும் இஸ்ரேல் நாளுக்கு நாள் தாக்குதலையும் தீவிரப்படுத்தியே வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி (31.07.2024) ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். இவர் ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த நிலையில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்தது. இதனையடுத்து ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பதவியேற்றுக்கொண்டார். இந்த சூழலில் காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரும் கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து போர் நிறுத்தம் செய்யுமாறு ஹமாஸ் அமைப்பையும், இஸ்ரேலையும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இரண்டு பேரும் அதற்குச் செவிசாய்க்காமல் தொடர்ந்து தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கின்றனர். அதே சமயம் அமெரிக்கத் தேர்தல் காரணமாகக் கடந்த ஒரு வாரக் காலமாக லெபனானின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே இரண்டாம் கட்ட தரைவழி தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் தொடங்கியது.

இத்தகைய சூழலில் தான் லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையம் அருகே வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள கட்டடங்கள் மற்றும் வணிக வளாகங்களைக் குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அருகில் இருந்த கட்டடங்கள் தரைமட்டமாகின. இதனால் பெய்ரூட் பகுதியைச் சுற்றிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

சார்ந்த செய்திகள்