ஹாங்காங் மக்களுக்குப் புகலிடம் வழங்கக்கூடாது எனக் கனடாவிற்கான சீனத் தூதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்த ஹாங்காங், சுதந்திரப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பின்பு, அது சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஹாங்காங் பகுதியை நிர்வகிக்க நிர்வாக அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு ஆட்சி நடைபெற்று வந்தது. நீண்ட காலமாக நிர்வாகப் பகுதியான ஹாங்காங்கை தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் திட்டமிட்டுவரும் சீனா, அதற்கான பணிகளையும் ஹாங்காங் மக்களின் எதிர்ப்பை மீறிச் செய்து வருகிறது. குற்றவாளிகளைச் சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக ஹாங்காங் மக்கள் போராட்டங்கள் நடத்தி வந்த சூழலில், அந்நகரத்தின் நேரடி அரசியலில் தலையிடும் வகையிலான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை அண்மையில் நிறைவேற்றியது சீனா. இந்நிலையில், பாதிக்கப்படும் ஹாங்காங் மக்களுக்குப் புகலிடம் வழங்கப்போவதாக இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் அறிவித்தனர்.
இந்தச் சூழலில், ஹாங்காங் மக்களுக்குப் புகலிடம் வழங்கக்கூடாது எனக் கனடாவிற்கான சீனத் தூதர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சீனத் தூதர் காங் பெய்வு, "சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையில் உள்ளதால், ஹாங்காங்கில் உள்ள வன்முறைக் குற்றவாளிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்கும் கனடாவின் முடிவை எதிர்க்கிறோம். நிச்சயமாக, கனடாவின் இந்த முடிவு வன்முறை குற்றவாளிகளுக்குத் தைரியமூட்டும் விதமாக அமையும். எனவே கனடா உண்மையில் ஹாங்காங்கின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி பற்றி அக்கறை கொண்டிருந்தால், இந்த முடிவை அவர்கள் கைவிட வேண்டும். மேலும், ஹாங்காங்கில் உள்ள 3,00,000 கனேடிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் நல்ல ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் ஹாங்காங்கில் இயங்கும் கனட நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றில் அக்கறை இருந்தால், சீனாவின் இந்த முயற்சிக்கு அவர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.