பண அச்சடிப்பு என்பது உலகம் முழுவதும் மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறும் ஒரு முக்கியமான விஷயம். இப்படிப்பட்ட ஒரு விஷயத்தில் மிகப்பெரிய தவறை செய்துள்ளது ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கி.
ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாக வெளியிடப்பட்ட 50 டாலர் பணநோட்டில் ஒரு இடத்தில் 'ஐ' என்ற ஆங்கில எழுத்தை அச்சடிக்காமல் விட்டுள்ளது அந்நாட்டு ரிசர்வ் வங்கி. புதிய மஞ்சள் வண்ணத்திலுள்ள இந்த நோட்டில் கீழ் பகுதியில் சிறிய எழுத்துக்களால் வாசகம் ஒன்று எழுதப்பட்டிருக்கும். அதில் "responsibility" என்பதை "responsibilty" என்று ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி எழுத்துப்பிழையோடு அச்சிட்டுள்ளது. நோட்டு வெளியிடப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில் தற்போதுதான் இந்த பிழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது தவறை ஒப்புக்கொண்டுள்ள ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி, எதிர்காலத்தில் இந்த மாதிரியான தவறுகள் நடக்காது என தெரிவித்துள்ளது. இந்திய பணமதிப்பில் சுமார் 2250 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நோட்டுகள் தற்போது பொதுமக்களிடையே புழக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.