சீனாவின் பெய்ஜிங்கில் ஒரு காய்கறி சந்தையை மையமாகக் கொண்டு மீண்டும் கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது கண்டறியப்பட்டுள்ள சூழலில், அந்தச் சந்தை மூடப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் உள்ள விலங்குகள் சந்தையிலிருந்து பரவ ஆரம்பித்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை இதுவரை பலி வாங்கியுள்ளது. இந்த வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த ஆறு மாதங்களாக உலகின் பல நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகள், ஏழை நாடுகள் எனப் பாகுபாடின்றி அனைத்து நாடுகளையும் முடக்கிப்போட்டுள்ள கரோனா வைரஸ் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டதாகக் கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சீனாவின் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை மெல்லத் திரும்பி வந்தது. இந்நிலையில் சீனாவின், பெய்ஜிங்கில் உள்ள காய்கறி சந்தை ஒன்றை மையமாகக் கொண்டு மீண்டும் கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கின் அருகே உள்ள ஃபெங்டாய் மாவட்டத்தின் ஜின்ஃபாடி மொத்த காய்கறி சந்தையில் 517 பேரிடம் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 45 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அவர்களில் யாருக்கும் கரோனா அறிகுறிகள் தென்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை கரோனா உறுதிப்படுத்தப்பட்ட 6 பேர் ஜின்ஃபாடி சந்தைக்கு வருகை தந்ததாக அந்நகர செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்தச் சந்தை மூடப்பட்டதோடு, அங்கு நடைபெற இருந்த விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சுற்றுலா சேவைகள் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன.